Wednesday, 30 July 2014

விண்ணகம்

மரியாவின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா?

   "விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட் டது." (திருவெளிப்பாடு 11:19) இறை இரக்கத்தின் அரிய ணையைத் தாங்கிய இந்த உடன்படிக்கைப் பேழையாகவே அன்னை மரியா செயல்படுகிறார். மோசேயின் சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பேழை யின் வழியாக, இஸ்ரயேல் மக்கள் கடவுளின் திருவு ளத்தை அறிந்துகொண்டதுடன், அவரது ஆசியையும் வழி நடத்துதலையும் பெற்றனர். அவ்வாறே விண்ணக கோவி லின் உடன்படிக்கைப் பேழையாகத் திகழும் அன்னை மரியா, புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையின் மக்கள் அனைவரும் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ள வும், அவரது அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகிறார். எனவே, மரியாவின் உதவியை நாடுவோர் நிலை வாழ்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதில் துளியள வும் சந்தேகம் இல்லை.
   "தூய கன்னி 'கடவுளின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். தூய அம்புரோஸ் ஏற்கெனவே கற்பித்ததுபோல், நம்பிக்கை, அன்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள நிறைஒன்றிப்பு ஆகியவற்றால் இறையன்னை திருச்சபையின் முன்மாதிரியாகத் திகழ்கிறார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு, "நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கிறார். தாம் பறைசாற்றப்படும்போதும் வணங்கப்படும்போதும், நம்பிக்கை கொண் டோரைத் தம் மகனிடமும் அவரது பலிக்கும் இறைத்தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல் கின்றார்." (திருச்சபை எண். 65)
   "இறைவனின் தூய அன்னையும், புதிய ஏவாளும், திருச்சபையின் தாயுமான மரியா, கிறிஸ்துவின் உறுப்பினர்களுக்காக பரிந்துபேசும் பணியை விண்ணகத்திலும் தொடர்கிறார் என நாம் நம்புகிறோம்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 975) இவ்வாறு, "தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும், கடவுளின் விருப்பத் திலிருந்தே உருவாகிறது; கிறிஸ்துவின் இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண் டுள்ளது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது; நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள நேர்முக ஒன்றிப்பை இச்செல்வாக்கு எவ்வகையிலும் தடுப்ப தில்லை; மாறாக அதைப் போற்றி வளர்க்கின்றது." (திருச்சபை எண். 60) எனவே, அன்னை மரியாவின் வழியாக விண்ணக வரங்களைத் தேடுவோர், அவரது பரிந்துரையால் விண்ண கத்தை பெற்றுக்கொள்வது உறுதி.

Wednesday, 23 July 2014

செபமாலை

'செபமாலை' மூலம் மரியாவை வாழ்த்துவது கடவு ளுக்கு ஏற்புடையதா?

   "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!" என்று செபமாலை யில் நாம் வாழ்த்துகிறோம். எந்த ஒரு தனிமனிதரோ, திருச்சபையோ இந்த வாழ்த்தை உருவாக்கவில்லை. இது, கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்த்து. தந்தையாம் இறை வனே கபிரியேல் தூதர் வழியாக, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்ற வார்த்தைகளால் மரியாவை வாழ்த்தினார். கடவு ளின் மீட்புத் திட்டத்தை மரியாவுக்கு அறிமுகம் செய்த வார்த்தைகள் இவை. "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக்கா 1:35) என்ற வானதூதரின் வார்த்தைகளுக்கு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற் படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று பதிலளித்த தால் மரியா இயேசுவின் தாயானார்.
   இறைமகனை கருத்தாங்கிய அன்னை மரியா, செக்கரி யாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும், அவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டார். அப்போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக்கா 1:42) என்று வாழ்த்தினார். இந்த வார்த்தைகள் தூய ஆவியாரின் தூண்டுதலால் எலிசபெத்து கூறியவை. இறைமகனை கரு வில் சுமந்து மீட்புத் திட்டம் நிறைவேற ஒத்துழைத்த அன்னை மரியாவை, இறைத்தந்தையும் இறைஆவியும் போற்றிப் புகழ்வதைக் காண்கிறோம். "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்று பவரே என் தாய்" (மாற்கு 4:35) என்று இயேசுவும் அன்னை மரியாவைப் பாராட்டுவதைக் காண்கிறோம். இவ்வாறு மூவொரு கடவுளால் வாழ்த்தப்பெற்ற மரியாவை ஆண்டவருக்கு விருப்பமான வார்த்தைகளில் புகழ்ந்து உதவி வேண்டுவதே செபமாலையின் அடிப்படை.
   கடவுளின் மீட்புத் திட்டத்தில் மறைபொருளின் ரோசா மலராகத் திகழும் கன்னி மரியா, 'இறைவனின் தாய்' என்ற மேலான பெருமையைப் பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே கிறிஸ்து இயேசுவைப் போன்று, உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் மாட்சியோடு திகழ்கிறார். எனவே, "திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத் துடன் பெருமைப்படுத்துகிறது. திருச்சபையில் என்றும் இருந்து வரும் இவ்வணக்கம், மனித ரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே வேறுபட்டது." (திருச்சபை எண். 66) இந்த வணக்கத்தின் ஒரு பகுதியாகவே செபமாலை பக்தியும் அமைந்துள்ளது. இறைத்தந்தை மற்றும் தூய ஆவியாரின் வார்த்தைகள் மூலம் அன்னை மரியாவை வாழ்த்தி, அவரது பரிந்துரையை வேண்டுவது கடவுளுக்கு ஏற் புடைய செயலே.

Wednesday, 16 July 2014

துயரில் ஆறுதல்

மரியாவை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?

   மனித குலத்தைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு மனிதரின் கரங்களால் துன்புற வேண்டியிருந்தது. "இதோ, இக்குழந்தை எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:34,35) என்ற சிமியோ னின் இறைவாக்கிற்கு ஏற்ப, இயேசுவின் துன்பத்தில் மரியாவும் பங்கேற்றார். கன்னி மரியா தூய ஆவியால் கருவுற்றதும், 'அவர் கணவர் யோசேப்பு அவரை மறை வாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.' (மத்தேயு 1:19) பெத்ல கேம் விடுதியில் இடம் கிடைக்காததால், இயேசுவை மரியா மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். (லூக்கா 2:7) ஏரோதிடம் இருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்கு ஓடிச் சென்றார். (மத்தேயு 2:14) பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மூன்று நாட்கள் அலைந்து திரிந்தார். (லூக்கா 2:46)
   இயேசுவின் பணி வாழ்வின்போதும், மரியா பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததைக் காண்கிறோம். இறைமகன் இயேசுவை ஒரு சீடராகவும் தாயாகவும் மரியா பின்தொடர்ந்தார். அதேநேரத்தில், மகனை சந்திக்காமல் மரியா தனிமையில் வாழ்ந்த நாட்களும் பல இருந்தன. இறையாட்சிப் பணியை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த இயேசு, மரியாவின் தாயன்பைக் காயப்படுத்திய தருணங் களும் உண்டு. இறுதியாக, மரணத் தீர்ப்புக்கு ஆளாகி சிலுவை சுமந்து சென்ற இயேசுவின் பாதையில் மரியாவும் பயணம் செய்தார். உலக மக்களைப் பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்க, "தான் பெற்றெடுத்த மகனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார்." (திருச்சபை எண். 58) இவ்வாறு இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்தின்போது உடனிருந்த அன்னை மரியா, துயரத்தின் உச்சத்தை அனுபவித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
   வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்ட மரியா, தம் மகனோடு விண்ணக மாட்சியில் பங்கு பெற்றிருக்கிறார். மனிதருக்குரிய அனைத்து துன்பங்களையும் சந்தித்தவர் என்பதால், நமது துன்ப நேரங்களில் பரிந்து பேசுபவராக இருக்கிறார். கானாவூர் திருமண வீட்டில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, அவர்களின் தேவையறிந்து அன்னை மரியா உதவி செய்ததை நற்செய்தி எடுத்துரைக்கிறது. "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று கூறிய இயேசுவின் மனதை தம் நம்பிக்கையால் மாற்றி, தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய முதல் புதுமை நிகழக் காரணமாக இருந்தவர் அன்னை மரியா. நமது துன்ப வேளைகளிலும் இத்தகைய வல்லமையுள்ள பரிந்துரையால் நாம் ஆறுதல் பெற முடியும் என்பதாலே, மரியன்னையை 'துன்புறுவோரின் ஆறுதல்' என அழைக்கிறோம்.

Wednesday, 9 July 2014

வானக அரசி

உலக வரலாற்றில் பிறந்த மரியாவை 'வானதூதர்க ளின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?

   மரியா உலக வரலாற்றில் பிறந்தவர்தான் என்றாலும், அவரது பிறப்பு கடவுளின்  மீட்புத் திட்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. வரலாற்றுக்கு முன்பே, இறைமக னின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் அன்னை மரியா. இறைவனின் மீட்புத் திட்டத்தை எதிர்த்த வானதூதர்களே அலகைகள் என்று பெயர் பெற்றதாக திருச்சபை கற்பிக் கிறது. மனித வரலாற்றில் தம்மை வெளிப்படுத்த விரும் பிய இறைவன், கன்னி மரியாவின் மகனாக இவ்வுலகில் தோன்ற விரும்பினார். இந்த திட்டத்தை வானதூதர்க ளுக்கு வெளிப்படுத்திய கடவுள், இறைமகனையும் இறை அன்னையையும் வணங்குமாறு கட்டளையிட்டார். இதை ஏற்று அதிதூதர் மிக்கேலின் தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு வானதூதர்கள், கன்னி மரியாவையும் குழந்தை இயேசுவையும் வணங்கியதாக கிறிஸ்தவ மரபு கூறுகிறது. இதிலிருந்தே, மரியா வானதூதர்களின் அரசி என்பதை உணர முடிகிறது.
   "வானதூதர்களைவிடத் தாழ்ந்த இனத்தில் பிறக்கும் இறைமகனையும், அவரது தாயையும் வணங்க முடியாது" என்று கூறி, லூசிபர் தலைமையில் மூன்றாவது பங்கு வானதூதர்கள் கிளர்ந்தெழுந்தனர். மிக்கேலும் அவரோடு சேர்ந்த தூதர் களும் லூசிபரின் கூட்டத்துக்கு எதிராக போரிட்டு, அவர்களை விண்ணகத்தில் இருந்து வெளி யேற்றியதாக திருச்சபைத் தந்தையர் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே, மனித குலத்தை பாவத்தில் வீழ்த்த தொடக்கம் முதலே அலகை சூழ்ச்சி செய்து வருகிறது. கடவுளின் திட்டத் துக்கு எதிராக மனிதரை செயல்படத் தூண்டும் வகையிலே அலகை எப்போதும் விழிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தனது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த வானதூதர்களின் அரசி யான கன்னி மரியாவை, மனிதர்களும் வணங்கவிடாமல் தடுப்பது அலகையின் நோக்கங் களில் ஒன்றாக இருக்கிறது.
   அனைத்துக்கும் மேலாக, இறைமகனின் தாய் என்ற உன்னத நிலையே கன்னி மரியாவுக்கு வானதூதர்களின் அரசியாகத் திகழும் மாண்பை அளித்துள்ளது.இவ்வுலக ஆட்சியாளர்களின் செயல்பாட்டில், அவர்களது குடும்பத்தினருக்கு உள்ள செல்வாக்கை காண்கிறோம். அவ்வாறே, அனைத்துலக அரசர் இயேசுவின் தாயான மரியா அனைத்துக்கும் அரசியாகத் திகழ்கிறார். "தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாக கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய மரியா கடவு ளின் தூய்மைமிகு தாய் ஆவார்." (திருச்சபை எண். 66) மேலும், "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:28,30) என்று கபிரியேல் தூதரால் வாழ்த்தப் பெற்ற கன்னி மரியாவை, வானதூதர்களின் அரசி என்று அழைப்பதில் தவறொன்றும் இல்லை.

Wednesday, 2 July 2014

புனிதப் பேழை

மரியாவை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?

   பழைய உடன்படிக்கையின் அடையாளமாக பொன் தகடு வேய்ந்த பேழை இருந்தது போல, புதிய உடன்படிக்கை யின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியா திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4) புதிய உடன்படிக்கைப் பேழை யான அன்னை மரியாவிடமும் இத்தகையப் பொருட்கள் இருந்ததைக் காண்கிறோம். வானத்தில் இருந்து பொழியப் பட்ட உணவாகிய மன்னாவைக் கொண்ட பொற்சாடிக்கு நிகராக, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய" (யோவான் 6:51) இயேசுவைத் தாங்கிய கருப்பை மரியாவிடம் இருக்கிறது. உயிர்ப்புக்கு அடையா ளமான ஆரோனின் கோலுக்கு மாற்றாக, "உயிரும் உயிர்ப் புமான" (யோவான் 11:25) இயேசுவைக் காண்கிறோம். இறைவார்த்தையைத் தாங்கிய கற்பலகைகளுக்கு பதி லாக, "மனிதரான இறைவார்த்தையே" (யோவான் 1:14) மரியாவின் வயிற்றில் இருந்தார்.
   இவ்வாறு, மரியா உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்வதற்கு விவிலியமே சான்று பகர் வதைக் காண்கிறோம். மேலும், "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலை நாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோசையர் 1:20) என்பதால், இயேசுவே மனிதகுலத்தோடு தந்தையாம் கடவுள் செய்துகொண்ட புதிய உடன்படிக்கையாகத் திகழ்கி றார். எனவே, இயேசுவைக் கருத்தாங்கிய அன்னை மரியா 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைக்கப்படுகிறார். மோசே வழியாக செய்யப்பட்ட பழைய உடன்படிக்கைக்கு கடவு ளின் திருச்சட்டம் அடிப்படையாக இருந்தது போல, புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து இயேசு போதித்த அன்பே ஆதாரமாக விளங்குகிறது. இந்த அன்பின் உடன்படிக்கையை உலகிற்கு கொண்டுவந்த பேழையாக அன்னை மரியா திகழ்கிறார்.
   மேலும், 'மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' (லூக்கா 1:39) என்று காண்கிறோம். பழைய உடன்படிக்கைப் பேழையும் யூதேய மலை நாட்டில் பயணித்ததை விவிலியம் எடுத்துரைக்கிறது: 'தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர்.' (2 சாமுவேல் 6:2) 'மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சி யால் துள்ளிற்று.' (லூக்கா 1:41) அவ்வாறே, 'தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.' (2 சாமுவேல் 6:5) "என் ஆண்ட வரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:43) என்று எலிசபெத்து கேட்டது போன்றே, "ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்?" (2 சாமுவேல் 6:9) என்று தாவீது வினவியதைக் காண்கிறோம். 'மரியா மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு வீடு திரும்பினார்.' (லூக்கா 1:56) 'ஆண்டவரின் பேழை ஓபோது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று.' (2 சாமுவேல் 6:11) 

Wednesday, 25 June 2014

விடிவெள்ளி

மரியாவை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?

   'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக் கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர் கள் விடிவெள்ளியைக் கொண்டே திசையை அறிந்ததால், இது 'கடலின் விண்மீன்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுவே, மரியா என்றப் பெயரின் பொருளாகும். எனவே இயேசுவின் தாய் மரியாவை 'விடிவெள்ளி' என்று அழைப் பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. அதேநேரத்தில், இது கடவுளால் வழங்கப்பட்ட காரணப் பெயராகவும் விளங்குகிறது. ஏனெனில் இயேசு என்ற ஆத வனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியா கவே உலக வரலாற்றில் மரியா தோன்றினார்.
   சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாவும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கி றார். கதிரவனின் பண்புநலன்களை விடிவெள்ளி பிரதி பலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியா திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாக வும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியா போற்றப்பெறுகின்றார். கத்தோ லிக்கத் திருச்சபையும் தூய ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்து வின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) எனவே, நமக்கு இறையாட்சியின் விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக மரியா விளங்கு கிறார் என்பதில் சந்தேகமில்லை.
   கீழ்த்திசை அடிவானத்தில் தோன்றும் விடிவெள்ளி, கடல் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர வழி செய்கிறது. நீண்ட நெடிய கடல் பயணத்தில் நம்பிக்கைச் சுடராக விடிவெள்ளி திகழ்கிறது. அவ்வாறே, மரியாவும் மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். முதிர்ந்த வயதில் கருவுற்ற எலிசபெத்துக்கும், கானா ஊர் திருமண வீட்டினருக்கும் தேவையறிந்து உதவி செய்ததன் மூலம் மரியா நம்பிக்கையின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியா தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கை யின் அடையாளமாக மரியா ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)

Wednesday, 18 June 2014

வானக மாட்சி

'மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்பதை உறுதி செய்ய முடியுமா?

   "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மக னைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்ற தில்லை" (யோவான் 3:13) என்ற இயேசுவின் கூற்றே இந்த சந்தேகத்துக்கு அடிப்படையாக அமைகின்றது. ஆனால் விண்ணகத்திற்கு ஏறிச்செல்வதும், விண்ணகத்திற்கு எடுத் துக்கொள்ளப்படுவதும் வெவ்வேறானவை என்பதைப் புரிந் துகொண்டால் இதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஏனோக்கின் விண்ணேற்பு பற்றி விவிலியம் பின்வருமாறு கூறுகிறது: 'ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.' (தொடக்க நூல் 5:24) இறைவாக்கினர் எசாயாவின் விண்ணேற்பை விவரிக்கும் வார்த்தைகள் இவை: 'இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்றார்.' (2 அரசர்கள் 2:11)
   கடவுளோடு நடந்த ஏனோக்கும், கடவுளின் வாக்கை அறிவித்த எலியாவும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது உண்மை என்கிறபோது, மனிதராய் தோன்றிய இறைமகன் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியா விண்ணகத் திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மையே என்பது தெளிவாகிறது. "அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்" (1 கொரிந்தியர் 15:53) என்ற வார்த்தைகளுக்கு ஏற்பவே மரியாவின் விண்ணேற்பு நிகழ்ந்தது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது" (மத்தேயு 5:37) என்று வாக்களித்த இயேசு, 'தம் அன்னையின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, எல்லாத் தலைமுறையினரும் அவரைப் பேறு பெற்றவர் எனப் போற்றும் வகையில் அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.' (லூக்கா 1:48-49)
   "மாசற்ற கன்னி மரியா, ஆதிப் பாவக்கறை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டு, இறுதியாக தம் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். மேலும் அனைத்துக்கும் அரசியாகவும் ஆண்டவரால் உயர்த்தப்பட் டார். இவ்வாறு ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரும், பாவம் மற்றும் சாவின் மீது வெற்றி கண்டவருமான தம் மகனுக்கு இன்னும் முழுமையாக ஒத்தவரானார். புனித கன்னியின் விண்ணேற்பு அவரது மகனின் உயிர்ப்பில் தனிப்பட்ட பங்கேற்பாகவும் மற்ற கிறிஸ்தவர்களின் உயிர்ப்புக்கு முன்னடையாளமாகவும் இருக்கிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 966) "வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட் டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்" (திருவெளிப்பாடு 12:1) என்னும் வார்த்தைகள் அன்னை மரியாவின் விண்ணக மாட்சியை உறுதி செய்கின்றன.

Wednesday, 11 June 2014

அடைக்கலம்

கடவுள் மட்டும்தானே பாவங்களை மன்னிக்க முடியும்! மரியாவைப் 'பாவிகளின் அடைக்கலம்' என்று அழைப் பது ஏன்?

   "கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" (மாற்கு 2:7) என்பது அனைவரின் உள் ளத்திலும் எழும் கேள்வி. இறைமகன் இயேசு பாவங்களை மன்னித்ததன் மூலம், பலரும் உடல், உள்ள, ஆன்ம நலன் களைப் பெற்றனர். இயேசுவுடனான சந்திப்பு பலரது வாழ் வில் புதிய மாற்றத்தை உருவாக்கியதைக் காண்கிறோம். இயேசு தம்மை நெருக்கமாகப் பின்தொடர்ந்த சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை வழங்கியதைக் காண்கிறோம்: "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப் பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங் களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா." (யோவான் 20:23) பாவம் இல்லாமல் உற்பவித்து உலக மீட்பரின் தாயான மரியாவும், இத்தகைய பாவ மன்னிப்பு அதிகாரத்தால் பாவிகள் மீட்படைய உதவுகிறார் என்பதே திருச்சபையின் போதனை.
   "மரியா உண்மையிலேயே, கிறிஸ்துவின் உறுப்புகளா கிய கிறிஸ்தவர்களுக்கு தாயாகத் திகழ்கின்றார். ஏனெனில், அந்த தலையானவரின் உறுப்புக ளாக நம்பிக்கை கொண்டோர் திருச்சபையில் பிறக்கும்படி அன்பினால் அவர் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 53) "என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின் றது" (லூக்கா 1:47) என்று பாடிய மரியா, மக்கள் அனைவரும் மீட்பு பெறுமாறு ஆண்டவரிடம் இடைவிடாது பரிந்துபேசி வருகிறார். "தலைமுறை தலைமுறையாய் இரக்கம் காட்டி வருகிற வர்" (லூக்கா 1:50) என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்த மரியா, தம்மை நாடி வரும் பாவிகளின் ஈடேற்றத்துக்காக ஆண்டவரின் இரக்கத்தை பெற்றுத் தருகிறார்.பாவங்கள் மன்னிக்கப்பட தம் மகனிடம் பரிந்து பேசும் மரியா, பாவிகளை நல்வழிப்படுத்துவதிலும் தாய்க்குரிய அன்போடு உதவி செய்து வருகிறார்.
   ஆகவேதான், "பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற முயற்சிக்கும் கிறிஸ் தவர்கள், தேர்ந்து கொள்ளப்பட்ட அனைவருக்கும் நற்பண்புகளின் முன்மாதிரியாக மிளிரும் மரியாவை நோக்கித் தம் கண்களை அவர்கள் உயர்த்துகின்றனர்." (திருச்சபை எண். 65) இயேசுவுக்கு மட்டுமின்றி திருச்சபையின் மக்கள் அனைவருக்கும் தாயாகத் திகழும் மரியா, இயேசுவைப் போன்று அவரது சகோதர சகோதரிகளான நாம் அனைவரும் நிறை வுள்ளவர்கள் ஆகுமாறு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார்; பாவிகள் அனைவரும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்து வழியாக தந்தையாம் கடவுள் அருளும் மீட்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் செய லாற்றி வருகிறார். விண்ணகத்தில் கடவுளின் மாட்சியில் பங்கு பெற்றுள்ள அன்னை மரியா, பாவிகளுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத்தர சோர்வின்றி பரிந்துபேசி வருவதால் 'பாவிகளுக்கு அடைக்கலம்' என்று அழைக்கப்படுகிறார்.

Wednesday, 4 June 2014

வெற்றியாளர்

இயேசுதானே சாத்தானை வெற்றிகொண்டார்! அப்படி யிருக்க மரியாவை சாத்தானை வெல்பவர் என ஏன் அழைக்க வேண்டும்?

   "தொடக்கத்திலிருந்தே பாவம் செய்து வரும் அலகை யின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் இயேசு இவ்வுலகில் தோன்றினார்" (1 யோவான் 3:8) என்பதே நாம் பெற்றுள்ள மீட்பின் நற்செய்தி. மனிதகுல மீட்பரான இயேசு மனிதராகப் பிறக்க வழியாக இருந்தவர் என்பதால், கடவுளின் திட்டத்தில் மரியா சிறப்பிடம் பெறுகிறார். உல கின் பாவத்தைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் தாய் ஆகுமாறு, மரியா மாசற்றவராய் படைக் கப்பட்டார். பாவத்தின் கறை படாமல் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த மரியா, "பாவத்தின் மீதும் சாவின் மீதும் வெற்றி கண்டவரான தம் மகனுக்கு இன்னும் அதிக நிறை வாக ஒத்தவராகுமாறு விண்ணுலக மாட்சிக்கு கடவுளால் உயர்த்தப் பெற்றார்." (திருச்சபை எண். 59) எனவே, சாத் தானை வெற்றி கொள்ளும் 'கடவுளின் இயல்பு மரியாவிட மும் இருக்கிறது.' (1 யோவான் 3:9)
   "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்" (லூக்கா 10:18-19) என்ற இயேசுவின் வார்த்தைகள், சாத்தானை வெல்லும் அதிகாரத்தை சீடர்களுக்கு வழங்குகின்றன. "ஆட்டுக் குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் சாத்தானை வென்றார் கள்" (திருவெளிப்பாடு 12:11) என்று மறைநூல் கூறுகிறது. இவ்வாறு கிறிஸ்துவின் மீது நம் பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டவரின் வல்லமையால் சாத்தானை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கும்போது, இயேசுவின் தாய் மரியாவுக்கும் இந்த ஆற்றல் இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு எங்கே இடம் இருக்கிறது?
   அனைத்துக்கும் மேலாக, "புதிய ஏவாளாகிய மரியா, ஆதிப்பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்காமல் கடவுளின் தூதரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டதால், உலக மீட்பராக கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு உலகின் மீட்புக்கு வழி திறந்ததால், சாத்தான் என்று அழைக்கப்படும் அலகையின் வீழ்ச்சிக்கு மரியாவே காரணமாக அமைந்தார். சாத்தானை வெற்றிகொண்டவர் கிறிஸ்து இயேசுவே என்றாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த மரியாவுக்கும் அந்த வெற்றியில் கடவுள் பங்கு அளித்தார். இவ்வாறு, "அமைதி தரும் கடவுள், மரியாவின் காலடியில் சாத்தானை நசுக்கிப் போட்டுள்ளார்." (உரோமையர் 16:20) எனவே, பாவிகளின் அடைக்கலமான மரியா சாத்தானை வெல்பவராகத் திகழ்கிறார் என்பதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

Wednesday, 28 May 2014

நம் அன்னை

மரியாவை யோவானின் தாயாகத்தானே இயேசு ஒப்ப டைத்தார். அவ்வாறெனில் அவரை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?

   "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத் தேயு 5:9) என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு மனிதரும் தமது நேரிய வாழ்வால் கடவுளின் பிள்ளைகள் ஆக முடி யும் என்பதே இதன் பொருள். கிறிஸ்து இயேசுவின் நேரிய செயல்களால் அவரை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவ ரும் இறைத் தந்தையின் பிள்ளைகளாகும் பேறு பெற்றிருக் கிறோம். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந் தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கு சொந்தமான பிள்ளைகளாக் கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்." (எபேசி யர் 1:3,5) இயேசுவின் தந்தையான கடவுள் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பது போன்று, அவரது தாயான மரியாவும் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் தாயாகத் திகழ்கிறார்.
   மரியாவை மனிதகுலத்தின் தாயாக்கும் கடவுளின் திட்டத்தை, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் இயேசு வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். 'இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார்.' (யோவான் 19:26-27) மரியாவை யோவானின் பாதுகாப்பில் ஒப்படைக்க இயேசு நினைத்திருந்தால், யோவானிடம்தான் முதலில் பேசியிருக்க வேண்டும். யோவானை முத லில் மரியாவிடம் ஒப்படைப்பதில் இருந்தே இயேசுவின் நோக்கம் தெளிவாகிறது. மேலும் நற்செய்தியில் யோவானின் பெயரைக் குறிப்பிடாமல் சீடரிடம் என பொதுவாக கூறுவதன் மூலம், இயேசுவின் சீடர்களாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் மரியாவைத் தாயாக ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுவதை உணர முடிகிறது. அதுவே, இயேசுவின் கடைசி விருப்பம் ஆகும்.
   'சிலுவை அடியில் நின்ற சீடர் மட்டுமே மரியாவைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்' (யோவான் 19:27) எனக் கூறப்பட்டிருந்தாலும், இயேசுவின் உயிர்ப்புக்கு பிறகு சீடர்கள் அனைவருமே அன்னை மரியாவின் அரவணைப்பில் வாழ்ந்ததைக் காண்கிறோம். 'அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியா வோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.' (திருத் தூதர் பணிகள் 1:14) இவ்வாறு, தூய ஆவியின் வல்லமையால் கிறிஸ்து இயேசுவைப் பெற் றெடுத்த மரியாவே, பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவி வல்லமையோடு இறங்கி வந்தபோது திருச்சபையின் மக்களைப் பெற்றெடுத்தார். ஆகவே, மரியா கிறிஸ்தவர்களின் தாயானார். பாவ வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக ஏவாள் இருப்பது போல், அருள் வாழ்வில் பங்கு பெறுவோரின் தாயாக மரியா திகழ்கிறார்.

Wednesday, 21 May 2014

துன்பங்கள்

மீட்புத் திட்டத்தில் மரியாவுக்கும் பங்கு இருக்கிறதென் றால், இயேசுவின் துன்பங்களிலும் அவர் பங்கேற் றாரா?

   வரலாற்றின் தொடக்கத்தில் உலகிற்கு மீட்பரை வாக்க ளித்த கடவுள், அவரது தாயைக் குறித்தும் முன்னறிவிப் பதைக் காண்கிறோம். "பெண்ணின் வித்து அலகையின் தலையைக் காயப்படுத்தும்" என்பதே மீட்பின் வாக்குறுதி. அலகையின் தலையை நசுக்கும் மீட்பரை உலகிற்கு கொண்டு வர ஒரு பெண்ணின் ஒத்துழைப்பு தேவைப்பட் டது. இவ்வாறு தீமை மற்றும் பாவத்தின் மொத்த வடிவான அலகையை ஒழிப்பதில் மீட்பரின் தாய்க்கும் கடவுள் பங்கு தந்தார். அலகைக்கு எதிரானப் போராட்டத்தில் இறைமகன் இயேசு பல சோதனைகளையும், வேதனைகளையும் சந் திக்க வேண்டியிருந்தது. மகன் அனுபவித்த இந்த துன்பங் களோடு தாயின் மனமும் ஒன்றித்திருந்தது என்பதை நாம் உறுதியாக கூற முடியும். எவ்வாறெனில், 'மரியா இந் நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித் துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19)
   அன்னை மரியா, இயேசுவின் துன்பங்களில் பங்குபெற வேண்டுமென்பது இறைத்தந்தையின் திருவுளமாக இருந்தது. 'திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் கோவிலுக்கு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றினார். பின்னர் சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.' (லூக்கா 2:27,28,34-35) சிமியோன் வழியாக அறிவிக்கப்பட்ட இந்த இறைவாக்கு கன்னி மரியாவின் வாழ்வில் முழுமையாக நிறைவேறியது.
   "மீட்பு அலுவலில் மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை கிறிஸ்து கன்னியிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு தூய கன்னி தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவை வரை விடாது காத்து வந்தார்; கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார்; தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற் றார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார். இறுதியாக, சிலுவையிலே உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே மரியாவைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) "ஓ, ஆசிபெற்ற அன்னையே! உண்மையாகவே, உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவியது. ஏனெனில் உமது இதயத்தை ஊடுருவினால்தானே உம் மகனின் இதயத் தில் வாள் நுழைய முடியும்" என்று புனித பெர்நார்து (1090-1153) கூறிய வார்த்தைகள் எத்துணை உண்மையானவை.

Thursday, 15 May 2014

இறைத்திட்டம்

'வரலாற்றின் தொடக்கத்திலேயே மரியாவை கடவுள் தேர்ந்தெடுத்தார்' என்று கூறுவது எப்படி சரியாகும்?

   "கிறிஸ்து இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட் டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. விண்ணிலுள் ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண் டார்." கொலோசையர் 1:15-17,20) இவ்வாறு மகனாகிய கடவுளுக்காக உருவாக்கப்பட்ட உலகம், அவராலே மீட் கப்பட வேண்டுமென தந்தையாகிய கடவுள் திருவுளம் கொண்டார். கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனித குலத்தைப் பாவத்தில் இருந்து மீட்க, மகனாகிய கடவுள் மனிதரின் உருவை ஏற்கத் திருவுளம் கொண்டார். அவ ருக்கு மனித உடலைக் கொடுக்க அன்னை மரியாவை தொடக்கம் முதலே கடவுள் முன்குறித்து வைத்திருந்தார். ஏனெனில், கடவுளின் திட்டம் ஒரு தாய் வழியாக நிறை வேற வேண்டியிருந்தது.
   வரலாற்றின் தொடக்கத்தில் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்ததால், முதல் பெற்றோர் தங்களின் அருள்நிலையை இழந்து தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டனர். கடவுளுடனான உறவை இழந்து பாவத்துக்கு அடிமையான மனிதகுலத்தை விடுவிக்க மகனாகிய கடவுளை மீட்பராக அனுப்ப தந்தையாம் கடவுள் திருவுளம் கொண்டார். உலக மக்களின் பாவங்களைப் போக்க வரும் இந்த மீட்பர், ஒரு தாயின் வயிற்றில் தோன்றி மானிட மகனாக பிறக்க வேண்டுமென்பது இறைத்திட்டமாக இருந்தது. இதையே கடவுள், "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்" (தொடக்க நூல் 3:15) என்ற மீட்பின் வாக்குறுதியாக அளிக்கிறார். இவ்வாறு கடவுளின் திட்டத்தில் தொடக்கம் முதலே மரியா இடம் பெற்றிருந்ததைக் காண்கிறோம்.
   "அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு 'காலம் நிறைவேறியபோது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்.' (கலாத்தியர் 4:4-5). இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்தார். மீட்பின் இந்த மறைபொருள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுத் திருச்சபையில் தொடர்ந்து நீடிக்கிறது." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "நெடுங்கால காத்திருப்புக்குப் பிறகு, சீயோனின் மகளாகிய மரியாவில் கடவுளின் திட்டம் முழுமை பெற்றது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 489) கடவுள் அளித்த வாக்குறுதியின் நிறைவாக இயேசு தோன்றியதால், மரியாவை வரலாற்றின் தொடக்கத்திலேயே கடவுள் தேர்ந்தெடுத்தார் என்பது நிரூபணமாகிறது.

Wednesday, 7 May 2014

அமல உற்பவம்

'மரியா பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

   "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறுகிறார். கடவுளைக் காண வேண்டுமானால் தூய மனம் தேவை என்பதே இதன் பொருள். கடவுளைக் காண்பதற்கே தூய்மையான உள்ளம் தேவை என்றால், அவரைத் தம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த கன்னி மரியா எவ்வளவு தூயவராக இருந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. அடிமையின் வடிவை ஏற்ற இறைமகனுக்கு தாயாகுமாறு கடவுளுக்கு தம்மையே அடிமையாக அர்ப்ப ணித்த கன்னி மரியா, மிகத் தூயவரான கடவுளைக் கருத் தாங்குமாறு மிகத் தூயவராக பிறக்க வேண்டுமென கட வுள் விரும்பினார். "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொ ளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இயேசுவை" (எபிரேயர் 1:3) கருத்தாங்கிப் பெற் றெடுக்குமாறு மரியா தம் தாயின் வயிற்றிலேயே பாவம் இல்லாமல் உற்பவித்தார்.
   முதல் ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியதால் பாவம் உலகில் நுழைந்தது. புதிய ஏவாளான மரியா கடவுளின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்ததால் மீட்பு உலகிற்கு வந்தது; மரியாவின் வழியாக இறைமகனும் மீட்பருமான இயேசு இவ்வுலகில் பிறந்தார். கடவுளின் விருப்பத்துக்கு முரணாக செயல்படும் மனித இயல்பே தொடக்கப் பாவம் அல்லது ஜென்மப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தம் தாயின் வயிற்றில் உருவாகும் பொழுதே, இந்த தொடக்கப் பாவத்தின் கரையுடனே பிறக்கிறார். ஆனால் கடவுளின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவர் என்பதால், அவரது திட்டம் நிறைவேறு வதற்காகவே மரியா இவ்வுலகில் அமல உற்பவியாகத் தோன்றினார். "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்" (லூக்கா 1:49) என்ற சொற்கள், தொடக்கப் பாவத்தின் கறை மரியாவை மாசுபடுத்த முடியவில்லை என்ப தையே பறைசாற்றுகின்றன.
   "தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் மரியாவை அழைத்த கடவுள், தம் வல்லமையால் இவ்வுலகின் தீய நாட்டங்களில் இருந்து அவரை விலக்கி காத்து, தம் இறைத்தன்மையில் பங்குபெறச் செய்தார்." (2 பேதுரு 1:3-4) இதன் காரணமாக, "மிகவும் ஆசிபெற்ற கன்னி மரியா உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, எல்லாம் வல்ல கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனிதகுல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பெருபலங்களினாலும், தொடக்கப் பாவத்தின் அனைத்து கரைகளில் இருந்தும் பாதுகாக்கப்பட்டார்" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 491) என்று திருச்சபை பறைசாற்றுகிறது. மீட்பரின் தாயாகுமாறு வரலாற் றின் தொடக்கத்திலேயே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், மரியா பாவம் இல்லா மல் உற்பவித்தார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. எனவேதான் வானதூதர் மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"என வாழ்த்தினார்.

Wednesday, 30 April 2014

இறையன்னை

மரியாவை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?

   கன்னி மரியா கடவுளின் தாய் என்பது நற்செய்தி எடுத்துக் கூறும் உண்மை. மாற்றுக் கருத்துக்கு இடமில் லாத இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை. ஏனெனில், "ஆண்டவர்தாமே உங்க ளுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற் றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெ டுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக் கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்" (எசாயா 7:14,9:6) என்று இறைவாக் கினர் முன்னறிவித்தது, இயேசுவின் பிறப்பில் நிறைவேறி யது. மகனாகிய கடவுளைத் தம் வயிற்றில் சுமந்து பெற் றெடுத்ததால், "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று அன்னை மரியாவால் சொல்ல முடிந்தது.
   கடவுள் அனுப்பிய வானதூதர் மரியாவிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" என்றார். (லூக்கா 1:35) இறைமகனைப் பெற்றெடுத்தவர் 'இறைவனின் தாய்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மனிதரின் நம்பிக்கை மட்டுமல்ல, தூய ஆவியாரால் வெளிபடுத்தப்பட்ட உண்மையும் ஆகும். மரியாவின் வாழ்த்தைக் கேட்டதும் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; என் ஆண்ட வரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:41-43) என்று உரத்த குரலில் கூறுவதைக் காண்கிறோம். எனவே, திருமுழுக்கின் வழியாக தூய ஆவியைப் பெற்ற ஒவ்வொருவரும் மரியாவை கடவுளின் தாய் என்று அறிக்கையிடுவர்.
   இயேசுவின் மீட்பு அலுவலில் முழுமையாக ஒத்துழைத்த மரியா, கடவுளின் தாய் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. "மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை, கிறிஸ்து கன்னி மரியாவிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு தூய கன்னியும் நம்பிக்கைத் திருப்பயணத்தில் முன்னேறிச் சென்றார். தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவைவரை விடாது காத்து வந்த மரியா, கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார். இறுதியாக சிலுவையில் உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே, மரியாவைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) எனவே, பாவமின்றி உற்பவித்த மரியாவை கடவுளின் தாயாகவும், நம் அன்னையாகவும் ஏற்றுக்கொள் வதன் வழியாக நாம் இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகத் திகழ முடியும்.

Wednesday, 23 April 2014

தூய்மைச் சடங்கு

'மரியா கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?

   "கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, கடவு ளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்." (பிலிப்பியர் 2:6-7)  உலக மக்களின் மீட்புக்கான இறைத்திட்டம், இயேசுவில் மட்டுமின்றி அவரது தாய் மரியாவிலும் நிறைவேற வேண்டியிருந்தது. ஆகவே, இறைமகனின் தாயாகுமாறு அழைப்பு பெற்ற மரியாவும் தம்மை "ஆண்டவரின் அடிமை"யாக (லூக்கா 1:38) ஒப்படைத்தார். இவ்வாறு இறைமகனின் உள்ளமும், இறையன்னையின் உள்ளமும் இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் இணைந்து செயல்பட்டன. தந்தையாகிய கடவுளின் மீட்புத் திட்டம் இவ்வுலகில் நிறைவேறுமாறு, மகனாகிய கடவுள், தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற் றில் கருவாகி மனிதராகப் பிறந்தார்.
   "காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட் டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) இறைமகனை ஈன்றெடுத்த அன்னை மரியாவும், "பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக முற்றிலும் கையளித்தார்." (திருச்சபை எண். 56) எனவே, "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்ற திருச்சட்டத்தை நிறை வேற்றுவதில் கருத்தாய் இருந்தார். "மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது, குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க மரியா தம் கணவர் யோசேப்புடன் எருசலேமுக்குச் சென்றார்." (லூக்கா 2:22)
   "இயேசு, தூய ஆவியால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாக உருவானார். ஏனெனில், அவர் புதிய படைப்பைத் தொடங்கிய புதிய ஆதாம்: 'முதல் மனிதர் மண்ணில் இருந்து வந்தவர், இரண்டாம் மனிதர் விண்ணில் இருந்து வந்தவர்.' கருவானது முதலே கிறிஸ்துவின் மனிதத் தன்மை தூய ஆவியால் நிரப்பப்பட்டிருந்தது. கடவுளோடு உறவில் இணைந்திருப்ப தற்கான மனிதரின் அழைப்பு, மரியாவின் கன்னித் தாய்மையில் முழுமையாக நிறைவு பெறுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 504,505) இவ்வாறு புனிதத்தில் நிறைந்திருந்த அவர், தம்மை பாவம் நிறைந்த மனிதகுலத்தின் உறுப்பினராகக் காட்ட தூய்மைச் சடங்கை நிறைவேற்றினார். இறைமகனை கருவில் சுமந்ததால் தூய கன்னியாக திகழ்ந்தாலும், இறைத் தந்தையின் திருவுளம் நிறைவேறுமாறு மரியா இவ்வாறு செய்தார். எனவே, கன்னி மரியா 'கடவுளின் தாய்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Wednesday, 16 April 2014

சகோதரர்கள்

"யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவரு டைய சகோதரர் அல்லவா?" (மாற்கு 6:3) என்று நாசரேத் ஊர்க்காரர்கள் கூறியது மரியாவின் மற்றப் பிள்ளைக ளைப் பற்றிதானே?

   "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரது போதனைகளையும், வல்ல செயல்களையும் கண்டாலும் நாசரேத்தூர் மக்கள், அவரை இறை மனிதராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார் கள். எனவே அவர்கள், "இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" (மாற்கு 6:3) என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார் கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. ஏனெனில் யூத வழக்கத்தின்படி, நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படு கின்றனர்.
   இதற்கு ஆதாரமாக விவிலியத்தில் இருந்து நாம் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், "நாம் சகோதரர்*" (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, "நீ என் சகோ தரன்* என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா?" (தொடக்கநூல் 29:15) என்று கேட்பதைக் காண்கிறோம். நற்செய்திகளில் சுட்டிக்காட்டப்படும் இயேசுவின் யாக்கோபு, யோசே, யூதா, சீமான் போன்றவர்களும் இத்தகைய உறவுமுறை சகோதரர்களே. மேலும், இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை என்பதும் தெளிவு. ஏனெனில் மரியா வும் யோசேப்பும் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றபோது, பன்னிரண்டு வயது சிறுவனான இயேசுவுடன் சகோதர, சகோதரிகள் யாரும் உடன் சென்றதாக கூறப்பட வில்லை. (லூக்கா 2:41-52)
   இயேசுவின் சகோதரர்களாக கருதப்படும் யாக்கோபு, யோசே ஆகியோர் மரியா என்ற பெயர் கொண்ட மற்றொரு தாயின் பிள்ளைகள். அவரை 'இயேசுவின் தாயின் சகோதரியும் குளோப் பாவின் மனைவியுமான மரியா' (யோவான் 19:25) என நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். 'அவர் களுள் மகதலா மரியாவும் யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்.' (மாற்கு 15:40) இறுதியாக, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ, சகோதரிகளோ இருந்திருந்தால், அன்னை மரியாவை அவர் யோவானின் பொறுப்பில் ஒப்ப டைக்க வேண்டிய (யோவான் 19:27) தேவை இருந்திருக்காது. எனவே, யூதா, சீமான் உள்பட இயேசுவின் சகோதர, சகோதரிகளாக நற்செய்தியில் காணப்படும் யாரும் மரியாவின் சொந்த பிள்ளைகள் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே, கடவுளின் தாயாக மட்டுமே கன்னி மரியா வாழ்ந்தார் என்பதும் தெளிவாகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*தமிழ் விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், பொருள் தெளிவுக்காக 'சகோதரர்' என்பதற்கு பதிலாக 'உறவினர்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Wednesday, 9 April 2014

கிறிஸ்தவர் தாய்

'மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப்பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைக ளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது?

   'அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத் தார்.' (லூக்கா 2:6-7) என்று நற்செய்தி கூறுகிறது. கிறிஸ் துமஸ் பெருவிழா திருப்பலியில் இந்த நற்செய்தி வாச கத்தை கேட்ட புனித ஜெர்த்ருத் (1256-1302), "இயேசு மட் டுமே மரியன்னைக்கு மகனாக இருக்கும்போது, 'மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' என்று நற்செய்தியா ளர் குறிப்பிடுவது ஏன்?" என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு காட்சி அளித்த அன்னை மரியா, "நற் செய்தியாளர் எழுதியிருப்பது சரியே. ஏனெனில் நான் இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றது மட்டுமின்றி, கல்வாரி மலையிலே கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஞான வித மாய் பெற்றேன். அதுமுதல் அவர்கள் அனைவரும் எனது பிள்ளைகளாகவும், இயேசுவின் சகோதர சகோதரிகளாக வும் இருக்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தினார். (கன்னி மரியாளின் வணக்க மாதம், பக்.44)
   'தலைமகன்' அல்லது 'தலைப்பேறான மகன்' என்ற பதம், முதல் குழந்தையைக் குறிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இரண்டாவது குழந்தை பிறந்தால்தான், முதல் குழந்தையை தலைமகன் என்று அழைக்க வேண்டும் என்பதில்லை. யூத மரபில் தலைமகனுக்கு ஒரு சிறப் பிடம் இருந்தது. "'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளது." (லூக்கா 2:23) இயேசு 'இறைமகன்', 'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்பதை உணர்த்த நற்செய்தியாளர் 'தலைமகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். "இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு." (கொலோசையர் 1:15) என்றும், "இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுரு வில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது" (கொலோசையர் 1:15) என்றும் திருத்தூதர் பவுல் சான்று பகர்கிறார்.
   "இவ்விறுதி நாள்களில், கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பினார்." (எபிரேயர் 1:2,6) இறைமகன் இயேசுவின் பொருட்டு யோசேப்பும், மரியாவும் தூயவர்களாக வாழ்ந்தார்கள். "ஏனெனில், கடவுளே அவர்க ளில் செயலாற்றி, தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் அளித்தார்." (பிலிப்பியர் 2:13) "இயேசு மட்டுமே மரியாவின் ஒரே மகன் என்றாலும், அவர் மீட்பளிக்க வந்த அனைத்து மனிதரிடமும் மரியாவின் ஆன்மீகத் தாய்மை விரிவடைகிறது: 'பல சகோதர சகோதரிகளிடையே, அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப்பேறாக' (உரோமையர் 8:29) நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்; நம்பிக்கை கொண் டோரை உருவாக்கி வளர்ப்பதில், அவர் தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்." (கத்தோ லிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண்.501) எனவே, இயேசுவைத் தவிர வேறு யாரையும் மரியா பெற்றெடுக்கவில்லை என்பது உறுதி.

Wednesday, 2 April 2014

தூய யோசேப்பு

'மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்று நற் செய்தி கூறுவதற்கு, அதன்பிறகு உறவு கொண்டார் என் பதுதானே அர்த்தம்?

   "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசு கூறினார். அப்படியெனில், முடிவுக்கு பிறகு அவர் நம்மோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம்கொள்ள முடியுமா? புனித யோசேப்பின் மனநிலையை நாம் சரியாக புரிந்துகொண் டால், மரியாவின் கன்னிமை பற்றிய சந்தேகங்களுக்கு இடமில்லாமல் போய்விடும். 'மரியாவுக்கும் யோசேப்புக் கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத் திட்டமிட்டார்' (மத்தேயு 1:18,19) என்று நற்செய்தி எடுத்துரைப்பதைக் காண்கிறோம். இதிலிருந்தே, மற்றொ ருவருடைய மனைவியைத் தன்னுடையவராக ஏற்றுக் கொள்ள யோசேப்புக்கு மனம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
   யோசேப்பு பிறரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாதவர் என்பதால், மரியாவை மறைவாக விலக்கத் திட்டமிடுவதைக் காண்கிறோம். 'அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரி டுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' (மத்தேயு 1:20-21,24) என்று நற்செய்தி கூறுகிறது. இதன் மூலம் யோசேப்பு, கடவுளின் திட்டத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தார் என்பதை அறிந்து கொள்கிறோம்.
   மரியா மற்றொரு மனிதரால் கருவுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தால் அவரை விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு, மரியா தூய ஆவியால் கருவுற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும் அவரை ஏற்றுக்கொள்கிறார். இவ்வுலகில் பிறக்க இருந்த மீட்பருக்கும், அவரது தாய்க்கும் பாதுகாவலராக விளங்க வேண்டுமென்ற கடவுளின் திட்டத்தை, யோசேப்பு சரியாகப் புரிந்து கொண்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே, 'மரியா தம் மகனைப் பெற்றெ டுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்ற வார்த்தைகள், இறைமகனின் மாட்சியைக் காணும் முன்பே தன்னடக்கத்துடன் இருந்த யோசேப்பு, இயேசு பிறந்தபிறகு எத்துணை தூயவராக விளங்கியிருப்பார் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றன. "மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர்" (மத்தேயு 1:19) என்ற புகழுரையே யோசேப்பின் தூய்மைக்கு சான்று பகர்கின்றது. எனவே, மரியாவின் கன்னிமை மீதான சந்தேகம் தேவை யற்றது.

Wednesday, 26 March 2014

கன்னித் தாய்

"இயேசு பிறந்த பிறகும் மரியா கன்னியாக இருந்தார்" என்று எப்படி கூற முடியும்?

   "தூய்மையான உள்ளத்தோரே கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்கிறார் இயேசு. அப்படியெனில், மனித உருவில் தோன்றிய இறை மகனைக் கருத்தாங்கிய கன்னி மரியா, உடலிலும் உள்ளத்திலும் எத்துணை தூயவராக இருந்திருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண் டியதில்லை. 'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக் கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்" என்று இறை வாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவே றவே இவை யாவும் நிகழ்ந்தன.' (மத்தேயு 1:18,22) என்று நற்செய்தி கூறுவதில் இருந்தே, ஆண்டவரின் மீட்பு திட்டத் தில் முன்குறிக்கப்பட்டவர் மரியா என்பது தெளிவாகிறது.
   கன்னி மரியாவின் வயிற்றில் இயேசுவின் உடலை உரு வாக்குமாறு "தூய ஆவி அவரில் குடிகொண்டிருந்ததால், அவர் ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருந்தார்." (உரோ மையர் 8:9) தூய ஆவியின் ஆலயமாகவும், இறைமகன் இயேசுவின் தாயாகவும் திகழ்வது மரியாவுக்கு "கடவுள் அளித்த தனிப்பட்ட அருள்கொடை" (1கொரிந்தியர் 7:7) ஆகும். "தூய ஆவி யின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது" (கலாத்தியர் 5:17) என்பதால், கடவுளுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த மரியா, வாழ்நாள் முழுவதும் கன்னியாகவேத் திகழ்ந்தார் என்ப தில் சந்தேகமில்லை. "மரியாவின் கன்னிமையே, கடவுள் மனித உடலெடுத்ததன் தூய தொடக் கத்தை வெளிப்படுத்துகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503)
   "கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவ ரது தீர்மானத்தால் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரிய வராக மரியா திகழ்கிறார்." (எபேசியர் 1:11) "மரியாவின் வாழ்வு கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்து இவ்வுலகில் மனிதராய்த் தோன்றுவதற்காக, மரியாவும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றினார்." (கொலோசையர் 3:3-4) "உண்மையில், கிறிஸ்துவின் பிறப்பு அவரது தாயின் கன்னிமையை குறைவுபடுத்துவதற்கு பதிலாக புனிதப்படுத்தியது. எனவே திருச்சபையின் திருவழிபாட்டில் மரியா, 'எப்பொழுதும் கன்னி' என்று கொண்டாடப்படுகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506)

Wednesday, 19 March 2014

பேறுபெற்ற தாய்

"உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" (லூக்கா 11:27) என்று ஒரு பெண் கூறிய போது, இயேசு அதைப் பொருட்படுத்தவே இல்லையே?

   'இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தி லிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.' (லூக்கா 11:27) "இது முதல் எல்லாத் தலை முறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக்கா 1:48) என்ற மரியாவின் இறைவாக்கு நிறைவேறுவதை இங்கு முதல்முறையாக காண்கிறோம். இதனை முன்னி றுத்தியே இயேசு அளிக்கும் பதிலும் அமைந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது: "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற் றோர்." (லூக்கா 11:28) அந்த பெண் கூறியது தவறு என்று இயேசு கூறவில்லை. தம்மைப் பெற்று வளர்த்ததால் மட் டுமல்ல, இறைவார்த்தையைக் கடைபிடித்து வாழ்ந்ததா லும் 'மரியா மிகவும் பேறுபெற்றவர்' என இயேசு புகழ்ந் துரைக்கிறார்.
   "காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண் ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார்." (எபிரேயர் 1:3) இவ்வாறு அனைத்தையும் தாங்கி நடத்தும் வார்த்தையான இறைவனையே தாழ்ச்சியால் தம் வயிற்றில் கருத்தாங்கும் பேறு பெற்றவர் மரியா. "தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்த படியே, அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்" (லூக்கா 1:69-70) என செக்கரியா இறைவாக்காக உரைத்தது மரியா இயேசுவைக் கருத்தாங் கியது பற்றியே என்பது தெளிவு.
   "மரியா, தம் நம்பிக்கையின் அடையாளத்தை எந்த சந்தேகத்தாலும் கறைபடுத்திக் கொள்ளா மல், கடவுளின் திருவுளத்துக்கு தம் கன்னிமையை முழுமையான கொடையாக அர்ப்பணித் தார். மரியாவின் நம்பிக்கையே, அவரை 'மீட்பரின் தாய்' ஆக்கியது. கிறிஸ்துவின் உடலைக் கருத்தாங்கியதைக் காட்டிலும், கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கை கொண்டதால் மரியா மிகவும் பேறுபெற்றவராக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 506) இவ்வாறு தம் உடலிலும் உள்ளத்திலும் கன்னிமை பழுதுறாதவராக வாழ்ந்ததால்தான், மரியாவால் மானிடமகனாகத் தோன்றிய இறைமகன் இயேசுவை வளர்த்து ஆளாக்க முடிந் தது. ஆண்டவரையே தம் மகன் என்று அழைக்கும் பேறுபெற்றவர் மரியாவைத் தவிர யார்?

Wednesday, 12 March 2014

கடவுளின் தாய்

இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவி யான மரியாவை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

   '"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப் பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே' (மத்தேயு 1:22) இறைமகன் இயேசு மனிதர் ஆனார். கடவுளும் மீட்பருமானவரின் தாயாகுமாறு தனிப் பட்ட அருள் வரங்களாலும், அலுவல்களாலும் அணி செய் யப்பட்டவராக மரியா திகழ்கிறார். இறைவனின் திட்டத் தால், கன்னியாக இருந்து கொண்டே தாயாகும் வரம் பெற் றவர் மரியா. "கணவரையே அறியாத அவர் தூய ஆவி நிழலிடத் தம் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் இறைத் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார்." (திருச் சபை எண். 63) எனவே. மரியாவின் தன்னுரிமையுள்ள ஒத் துழைப்பின் வழியாகவே "கடவுள் மனிதராகி நம்மிடையே குடிகொண்டார்" (யோவான் 1:14) என்பது தெளிவாகிறது.
   "நற்செய்திகளில், 'இயேசுவின் தாய்' என்று அழைக்கப்ப டும் மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் முன்பே, அவரை 'ஆண்டவரின் தாய்' என தூய ஆவியின் தூண்டுதலால் எலிசபெத் அழைத்தார். உண்மையில், தூய ஆவியால் கன்னி மரியாவின் வயிற்றில் மனிதராக கருவான அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், இறைத்தந்தையின் நித்திய மகனுமானவர், உடல் சார்ந்த முறையில் உண்மையிலேயே மரியாவின் மகன் ஆனார். எனவே, திருச்சபை மரியாவை உண்மை யாகவே 'கடவுளின் தாய்' (Theotokos) என்று அறிக்கையிடுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 495) கண்ணுக்குப் புலப்படாதவரும், உலகமே கொள்ள முடியாதவருமான கடவுளை, தம் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாவை 'கடவுளின் தாய்' என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை.
   "திருச்சபை முதலில் தோன்றிய காலத்தில் இருந்தே, இயேசு தூய ஆவியின் வல்லமை யாலே கன்னி மரியாவின் திருவயிற்றில் கருவானார் என்பதை அறிக்கையிடுகிறது; 'மனித வித்தின்றி தூய ஆவியின் வல்லமையால்' இயேசு கருவான நிகழ்வை உடல் சார்ந்த நிலை யில் உறுதிப்படுத்துகிறது. கன்னி கருத்தாங்குதலை, இறைமகன் நம்மைப் போன்று மனிதரா னதை உறுதிப்படுத்தும் அடையாளமாக திருச்சபைத் தந்தையர் காண்கின்றனர். எனவே அந்தி யோக்கு புனித இக்னேசியு, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்: தூய கன்னியே, நீர் உறுதியாக நமது ஆண்டவரைக் கருத்தாங்கினீர்." (கத்தோலிக்க திருச் சபையின் மறைக்கல்வி எண். 496) "மனிதரான நித்திய இறைமகனும், கடவுளுமானவரின் தாயாக இருப்பதால், மரியா உண்மையிலேயே 'கடவுளின் தாய்'தான்!" (கத்தோலிக்க திருச் சபையின் மறைக்கல்வி எண். 509)

Wednesday, 5 March 2014

இயேசுவின் தாய்

நாம் மரியாவை 'இயேசுவின் தாய்' என்று அழைத்தா லும், இயேசு அவரை 'பெண்ணே!' என்று சாதாரண மாகத்தானே அழைத்தார்?

   'பெத்லகேமில் இருந்தபொழுது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந் தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது, அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.' (லூக் 2:6-7,21) இவ்வாறு நற்செய்தியாளர் கூறுவதில் இருந்து 'மரியா இயேசுவின் தாய்' என்பது தெளிவாகிறது. இயேசு வளர்ந்த ஊர் மக்கள் அவரை, 'மரியாவின் மகன்' என்றே அழைத்தனர். "இவருடைய தாய் மரியா என்பவர்தானே?" (மத்தேயு 13:55) "இவர் மரியாவின் மகன் தானே!" (மாற்கு 6:3) என்று நாசரேத்து ஊரினர் கூறியதாக நற்செய்தி தெளி வாக எடுத்துரைக்கிறது. இயேசு இறைமகனாக இருந்தா லும், தம்மை "மானிடமகன்" (மத்தேயு 16:13) என்று கூறி வந்ததன் மூலம் தம் தாய் மரியாவைப் பெருமைப்படுத்தி னார். இவ்வாறு இயேசு, தம்மைப் பெண்ணின் வித்தாக வும், புதிய ஆதாமாகவும் அடையாளப்படுத்துகிறார்.
   இறைத்தந்தையின் மீட்புத் திட்டத்தில் புதிய ஆதாமாகத் திகழ்ந்த இயேசுவுக்குத் துணைநிற்கும் புதிய ஏவாளாக மரியா செயல்படுவதை காண்கிறோம். முதல் ஆதாமுக்குத் தகுந்த துணையாக முதல் ஏவாள் படைக்கப்பட்டதுபோல (தொடக்க நூல் 2:20-23), புதிய ஆதாமான இயேசுவுக்காக புதிய ஏவாளான மரியாவும் அருள்நிலையில் படைக்கப்பட்டார். இயேசுவின் மீட்பு பணியில் நம்பிக்கையோடு ஒத்துழைத்ததால், மரியா நம்பிக்கை கொண்டோரின் தாயாக விளங்குகிறார். இவ்வாறு, " உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்" (தொடக்க நூல் 3:15) என்ற முன்னறிவிப்பை நிறைவேற்றிய பெண்ணாக மரியா திகழ்கிறார். இதை சுட்டிக்காட்டவே, இயேசு தம் வாழ்வின் இரண்டு முக்கியத் தருணங் களில் மரியாவை "பெண்ணே!" என்று அழைக்கிறார்.
   முதலாவதாக இயேசு இறையாட்சி பணியைத் தொடங்கிய காலத்தில், கானாவூர் திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதை கூறும் மரியாவிடம், "பெண்ணே, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என இயேசு கேட்கிறார். இருந்தாலும் மரியாவின் நம்பிக்கையால், தண்ணீர் திராட்சை இரசமான முதல் அற்புதத்தை இயேசு நிகழ்த்துவதைக் காண்கிறோம். ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்ததைப்போல, இயேசு அற்புதம் நிகழ்த்த மரியா காரணமாக இருக்கிறார். இரண்டாவது, உலக மீட்புக்காக இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில், தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "பெண்ணே, இவரே உம் மகன்" (யோவான் 19:26) என்றார். இவ்வாறு இயேசு, தம் சீடர்கள் அனைவரையும் மரியாவின் பிள்ளைகளாக ஒப்படைத்தார். எனவே, மண்ணில் வாழ்வோர் அனைவருக்கும் தாயாக ஏவாள் இருப்பது போன்று, விண்ணக வாழ் வுக்கு தகுதிபெறும் அனைவருக்கும் தாயாக மரியா திகழ்கின்றார்.

Wednesday, 26 February 2014

தாய்க்கு மரியாதை

மரியாவை மதிக்காததால்தானே, "என் தாய் யார்?" (மத்தேயு 12:48) என்று கேட்டு இயேசு அவரை அவமானப் படுத்தினார்?

   "இறைமகன் இயேசு விண்ணகத்தில் தாய் இல்லாதவரா கவும், மண்ணகத்தில் தந்தை இல்லாதவராகவும் தோன்றி னார்" என்பதே நமது விசுவாசம். 'இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்' (லூக்கா 2:52) என்று நற் செய்தி கூறுகிறது. மனிதர்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கிய கடவுள், ஆண்டவர் பேரிலுள்ள கடமை முடிந்த தும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை குறித்து எடுத்துரைக்கிறார். "உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட" (விடுதலைப் பயணம் 20:12) என்பதே ஆண்ட வர் நமக்கு வழங்கிய கட்டளை. "நீர் வாழ்வடைய விரும் பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்" (மத்தேயு 16:13) என்று கூறிய இயேசு, "திருச்சட்டத்தையும் இறைவாக்கு களையும் நிறைவேற்றுவதற்கே வந்தார்." (மத்தேயு 5:17) எனவே, அவர் விண்ணகத் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருந்ததுடன், தம் மண்ணகப் பெற்றோர்களுக்கும் பணிந்து நடந்தார். (லூக்கா 2:49,51)
   'ஒருநாள் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, "அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார். அதற்கு இயேசு, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்று பவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.' (மத்தேயு 12:46-50) இந்நிகழ்வில் இயேசு, மக்கள் அனைவரையுமே தம் சகோதரராகவும், சகோதரியாகவும், தாயாகவும் மாற அழைப்பு விடுக்கிறார். மேலும் விண்ணகத் தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முற்றிலும் அர்ப்பணித்து, மீட்புத் திட்டத்தில் ஒத்துழைத்த அன்னை மரியாவையும் இயேசு பெருமைப் படுத்துகிறார்.
   "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதி யுள்ளவர் அல்ல" (லூக்கா 9:62) என்ற தம் வார்த்தைகளுக்கு ஏற்ப, இயேசு இங்கு குடும்ப உறவுகளை விலக்கி வைப்பதை காண்கிறோம். இதில் மரியாவை அவமானப்படுத்தும் நோக் கம் எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். "என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்" (மத்தேயு 10:37) என்ற தமது போதனைக்கு உயிரூட்டம் கொடுக்கும் வகையில், தாம் இறைத் தந்தைக்கு உரியவர் என்பதை இயேசு இங்கு தெளிவுபடுத்துகிறார். அதே வேளையில், உலக மீட்புக்காக இறைத்தந்தையின் திருவுளத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து, வார்த்தை யான இறைமகனுக்கு மனித உடல் கொடுத்த கன்னி மரியாவின் மேன்மையையும் இயேசு புகழ்ந்துரைக்கின்றார்.

Wednesday, 19 February 2014

மகனுடன் மரியா

மரியா முக்கியமானவர் என்றால் நற்செய்தி நூல்க ளில் அவரைப் பற்றி சிறிதளவு மட்டுமே எழுதப்பட் டிருப்பது ஏன்?

   இறைமகன் இயேசுவின் வாழ்வையும், வழிகாட்டுதலை யும் நமக்கு வழங்கவே நற்செய்தி நூல்கள் எழுதப்பட் டன. "மனிதராய் பிறந்தவர்களுள் பெரியவர்" (மத்தேயு 11: 11) என்று இயேசுவால் போற்றப்பட்ட திருமுழுக்கு யோவா னைப் பற்றியும், "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தப்பட்ட கன்னி மரியாவைப் பற்றியும் நற்செய்திகள் அதிகமாக பேசவில்லை என்றாலும், மீட்புத் திட்டத்தில் அவர்களின் பங்கைத் தெளிவாகவே எடுத்து ரைக்கின்றன. "தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் தோன்ற" (லூக்கா 1:70) முழு மனதோடு ஒத்துழைத் தவர் என்பதால், இறைவனின் திட்டத்தில் மரியா முக்கிய மானவர் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இயேசு வைக் கருத்தாங்கியது முதல் கல்லறையில் வைத்தது வரையிலான மரியாவின் பங்கேற்பை நற்செய்தி நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
   உன்னதரான இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்கு மாறு, "கடவுளின் அருளை மரியா கண்டடைந்தார்." (லூக்கா 1:30) கணவரை அறியாத கன்னி யாக இருந்தும், "ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியதால் மரியா பேறுபெற்றவரானார்." (லூக்கா 1:45) இவ்வாறு கடவுளின் திட்டத்துக்கு தம்மையே அடிமையாக கையளித்த மரியாவை "எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்பர்." (லூக்கா 1:48) இறைவார்த்தையான இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்த மரியா, 'இறைத் திட்டத்தின்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தபோது, "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:35) என்ற இறைவாக்கு மரியாவுக்கு அருளப்பட்டது.
   குழந்தை இயேசுவைக் காண வந்த கீழ்த்திசை ஞானிகள், "குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள்." (மத்தேயு 2:11) இயேசு எப்போதும் தம் தாய் மரியாவுக்குப் பணிந்து நடந்தார். (லூக்கா 2:51) அன்னை மரியா வின் நம்பிக்கையால், கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீர திராட்சை இரசமாக மாற்றி னார். (யோவான் 2:1-11) 'மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய தாய் மரியா அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்.' (மத்தேயு 12:46) இவ்வாறு இயேசுவின் விருப்பத்தை அறிந்து நடக்க, மரியா எப்போதும் ஆவலாய் காத்திருந்தார். இறுதியாக சிலுவை அருகில் நின்ற மரியாவை, இயேசு தம் சீடருக்கு தாயாக அளித்தார். (யோவான் 19:25-27) அந்த தாயை மதித்து போற்றுவது நம் கடமையாகும்.

Wednesday, 12 February 2014

பரிந்துரை மரியா

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லா ரும் என்னிடம் வாருங்கள்!" (மத்தேயு 11:28) என்று இயேசு அழைக்கும்போது, மரியாவிடம் செல்வது ஏன்?

   "நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் இயேசு நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவு ளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்." (உரோமையர் 5:10) நம்மை இறைத்தந்தையோடு ஒப்புரவாக்கி நமது மீட்புக்கு காரணமான தலைமைக் குரு இயேசுவின் தாயாகுமாறு, விண்ணக அழைப்பு (எபிரேயர் 3:1) பெற்றவர் கன்னி மரியா. இவ்வாறு, "மரியாவின் மூலமாக மாட்சி பெறத் திருவுளம் கொண்ட நித்திய தந்தை, அவர் மூலமாக எல்லையற்ற வரங்களை நம்மீது பொழியவும் விருப்பம் கொண்டார். மரியா வழியாக இறைத்தந்தை நமக்குத் தந்த கொடைகளுள் மிகச்சிறந்த நற்கொடை நமது ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்துவே!" (மரியாயின் சேனை கைநூல் அதி. 5/1) இயேசுவை மனிதகுலத்துக்கு கொடையாக அளித்தவர் மரியா என்பதால், மரியாவை நாடும் அனைவ ரும் இயேசுவைக் கண்டடைகின்றனர்.
   "'கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்குமிடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்' (1திமோத்தேயு  2:5-6) என்ற திருத்தூதரின் கூற்றுக்கேற்ப, நம் இணைப்பாளர் ஒருவரே. இறைமகன் இயேசுவின் இந்த இணைப்பாளர் பணி தன்னிகரற்றது. எனவே மரியாவின் பரிந்துரைக்கும் பணியால், கிறிஸ்துவின் இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதுமில்லை, குறைவதுமில்லை. மாறாக, அதன் ஆறறல் இதன் வழியாக வெளிப்படு கிறது. ஏனெனில், தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும் கிறிஸ்துவினுடைய பேறுபலன்களின் நிறைவுப் பெருக்கத்தினின்றே வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அப்பணியை முற்றிலும் சார்ந்த தாய் இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது." (திருச்சபை எண். 60)
   மரி லத்தாஸ்ட் (1822-1847) என்ற கன்னிக்கு காட்சி அளித்த நம் ஆண்டவர் இயேசு, "கடவு ளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளராக நான் இருக்கிறதைப் போன்று, எனக்கும் உங்களுக்கும் இடையிலான இணைப்பாளராக கன்னி மரியாவை நியமித்திருக்கிறேன். ஆகவே, உங்களுக்கு நான் கொடுக்கிற அருள்வரங்களை இறையன்னை வழியாக மட்டுமே பெற முடியும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும், என் திவ்விய தாயின் பரிந்துரை மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர் ஆசி வழங்குபவர்களுக்கு நானும் ஆசி வழங்குவேன்" என்று கூறியுள்ளார். எனவே, நமது சுமைகளை அன்னை மரியாவிடம் இறக்கி வைக்கும் போது, இறைமகன் இயேசுவின் ஆறுதலை நாம் கண்டடைய முடியும். இறைவனின் திட்டத் தில் மரியா முக்கியமானவராகத் திகழ்வதை நாம் இதன் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

Wednesday, 5 February 2014

கடவுளின் அடிமை

மரியா மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்று எப்படி கூற முடியும்?

   "மரியா உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, தொடக் கப் பாவத்தின் கறையில் இருந்தும் மற்ற அனைத்து பாவங்களில் இருந்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, தம் வாழ்நாள் முழுவதும் தூயவராகத் திகழ்ந்தார்." (கத் தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508) "மீட்புத் திட்டத்தில் தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவ ரான மரியா, தம் மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமென கடவுள் இவ்வாறு முன்குறித்து வைத்தார்." (உரோமையர் 8:29) எனவே, "தம் உடலில் நிகழ்ந்த மறை நிகழ்ச்சிகள் வாயிலாக மனிதரைப் பாவத்தினின்று மீட்க வந்த இறைமகன் இயேசு, மரியாவிடம் இருந்து மனித இயல்பை எடுத்துக் கொண்டார்." (திருச்சபை எண். 55)
   "மரியாவின் கன்னிமையே கடவுளின் மனித உடலேற் புக்கு உண்மையான தொடக்கமாக அமைந்தது." (கத்தோ லிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 503) இறைத் தந்தையின் திட்டத்துக்கு "ஆம்" என பதில் அளித்ததால், இறைமகன் இயேசுவைத் தூய ஆவியின் வல்லமையால் கருத்தாங்கும் பேறுபெற்றவர் மரியா. "தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக மரியா முற்றிலும் கையளித்தார். இவ்வாறு எல்லாம் வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்லாமல், நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ் வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் மரியா." (திருச்சபை எண். 55)
   "ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப் படிதலால் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்." (உரோமையர் 5:19) முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால், மண்ணிலிருந்து வந்த முதல் ஆதாம் மனிதகுலத்தின் அருளை இழக்கச் செய்தார். புதிய ஏவாளான மரியாவின் கீழ்ப்படிதலால், விண்ணிலிருந்து வந்த புதிய ஆதாமான இயேசு மனிதகுலம் இழந்த அருளைப் பெற்றுத்தந்தார். இவ்வாறு, இறைவனின் மீட்பு அலுவலில் மரியா ஓர் இன்றியமையாத பகுதியாக ஆகிவிட்டார். இறைத்திட்டத்தில் உயிரோட்டமான சிறப்புமிக்க இடத்தை மரியா பெற்றிருப்பதால், கடவுளின் மகிமையும் பெரு குகின்றது." (மரியாயின் சேனை கைநூல் அதி. 5/1) எனவே, மரியா மனிதகுலத்தின் வணக் கத்திற்கு தகுதியானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Wednesday, 29 January 2014

மரியே வாழ்க!

"கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவ தாக!" (தானியேல் 2:20) என்றுதானே கூறப்பட்டிருக்கிறது. மரியாவை ஏன் வாழ்த்த வேண்டும்?

   எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) இவ்வுலகில் தந்தை இல்லாதவராக பிறந்த இறைமகன் இயேசு, தாய் இல்லாதவராக தோன்ற விரும்பவில்லை. இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றித்திருக்கிற இறைமகனை அற்புதமான முறையில் கருத்தாங்கிப் பெற்றெடுத்ததால் இறைவனின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியா. உலகமே கொள்ளாத இறைவனை, தம் வயிற்றில் சுமந்த மரியாவை நாம் வாழ்த்துவதில் தவ றெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மரியா மக்கள் அனைவராலும் வாழ்த்தப்பட வேண்டுமென்பது கடவுளின் திருவுளம். 
   "விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதை யும் பெற்றுக் கொள்ள முடியாது" (யோவான் 3:27) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, மரியா பெறுகின்ற வாழ்த்தும் விண்ணில் இருந்தே வந்தது. மரியா இறைமகனின் தாயாக முன்குறிக்கப்பட்டிருந்ததால் தந்தையாம் கடவுள் தம் வானதூதரை அனுப்பி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க!" (லூக்கா 1:28) என வாழ்த்துகிறார். "அறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனின் செயல்முறைகளுக்கும், அவரது முடிவில்லா விருப்பத்திற்கும் நடுவில் நின்றுகொண்டு, விசுவாசத்தின் மங்கலான ஒளியில், இறைவனின் திட்டத்துக்கு தம்மை கையளித்ததால்" (மரியாயின் சேனை கைநூல் அதி. 5) மரியா ஆண்டவரின் தாயானார். இவ்வாறு எல்லாத் தலைமுறையினரிடமும் 'பேறுபெற்றவர்' (லூக்கா 1:48) என்ற வாழ்த்தை மரியா உரிமையாக்கிக் கொண்டார்.
   தூய ஆவியாரின் வல்லமையால் 'உன்னத கடவுளின் மகனை' (லூக்கா 1:32) கருத்தாங்கிய மரியா, செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது எலிசபெத்தை ஆட்கொண்ட தூய ஆவியார், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தியதோடு, மரியாவை "ஆண்டவரின் தாய்" (1:43) என்றும் அழைத்தார். "ஓர் எளியப் பெண் இறைவனின் தாயாக இருப்பது அனைத்திற்கும் மேலான இறைத்திட்டம் அல்லவா? அவர் ஒரு கன்னிப் பெண்ணைத் தம் தாயாகச் செய்ததை மிகச்சிறந்த அற்புதம் என்று சொல்வதற்கு தடை எதுவும் உண்டோ?" (கன்னி மரியாளின் வணக்க மாதம் பக். 23) இவ்வாறு மூவொரு இறைவனிடம் பெற்றிருக்கும் மேன்மையான இடத்தால், மரியா மனிதகுலத்தின் வாழ்த்துக்கும் வணக்கத் திற்கும் என்றும் தகுதி உள்ளவராகத் திகழ்கிறார்.

Wednesday, 22 January 2014

அன்னை வணக்கம்

"உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவ ருக்கே பணி செய்" (மத்தேயு 4:10) என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக, மரியாவுக்கு வணக்கம் செலுத்து வது ஏன்?

   "வானதூதர் தூது சொல்ல வந்த நேரத்தில் நம்பிக்கை யுடன் தாம் அளித்த இசைவைக் கன்னி மரியா சிலுவை வரை தயங்காது காத்து வந்தார். இவ்வாறு இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டோர் முடிவில்லா நிறைவு பெறும்வரை அருள் திட்டத்தின்படி மரியாவின் தாய்மையும் தடையின்றி நீடிக்கும். ஏனெனில், விண் ணேற்புக்குப் பின்பும் இந்நிறைவாழ்வு அலுவலை அவர் விட்டுவிடவில்லை. மாறாக பலவிதங்களில் பரிந்துபேசி நிலையான நிறைவாழ்வடைய நமக்குத் தேவையான கொடைகளை எப்போதும் பெற்றுத் தருகின்றார்." (திருச் சபை எண். 62) எனவே, "நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு நம்பிக்கை கொண்டோர் முதற் கண் வணக்கம் செலுத்த வேண்டும்." (திருச்சபை எண். 52)
   "திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத் தால் (Hyperdulia) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப் பெற்றவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் 'கடவுளின் தூய்மைமிகு தாய்' ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் புகலடைந்திருக்கின்றனர். குறிப்பாக எபேசு (கி.பி. 431) திருச்சங்கத்திற்குப் பிறகு, வியத்தகு முறையில் கடவுளின் மக்கள் மரியாவை அதிக மதிகம் வணங்கவும், அன்பு செய்யவும், உதவிக்கு அழைக்கவும், கண்டுபாவிக்கவும் முற்பட் டனர்." (திருச்சபை எண். 66)
   "'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்' (லூக்கா 1:48) என்று மரியாவே முன்மொழிந்ததற்கு ஏற்ப, திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக் கம் உண்மையிலேயே தனிப்பட்டது. மனிதரான வாக்குக்கும், தந்தைக்கும், தூய ஆவியா ருக்கும் நாம் அளிக்கும் ஆராதனையில் (Latria) இருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது. மேலும், இறை ஆராதனையை இவ்வணக்கம் மிகச்சிறந்த விதமாய் ஊக்குவிக்கிறது எனலாம். வழுவற்ற மரபுக் கோட்பாட்டிலிருந்து மாறுபடாத, இறையன்னைக்குரிய பலவகையான பக்தி முயற்சிகளின் பயனாக நாம் தாயைப் பெருமைப்படுத்தும்போது, மகனை அறிந்து, அன்பு செய்து மாட்சிமைப்படுத்துகிறோம்; அவர் கட்டளைகளின்படி நடக்கிறோம். ஏனெனில், அவ ருக்காகவே அனைத்தும் உள்ளன.' (கொலோசையர் 1:15-16)" (திருச்சபை எண். 66)

Wednesday, 15 January 2014

மரியாவின் சிறப்பு

கடவுளால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர் என்று கூறும் அளவுக்கு மரியாவிடம் காணப்படும் சிறப்பு என்ன?

   "பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத் திருநூல்களும் மாண்புக்குரிய மரபும் நிறவாழ்வுத் திட்டத்தில் மீட்பரின் தாய்க்குரிய பணியை மேன்மெலும் அதிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்கள், மீட்ப ரின் தாயான ஒரு பெண்ணின் உருவைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன. முதல் பெற்றோர் பாவம் புரிந்தபின், அலகையின் மேல் பெறப்போகும் வெற்றியைப் பற்றிய வாக்குறுதி அவர்களுக்கு அளிக்கப் பெற்றது. இவ் வாக்குறுதியில் மரியா இறைவாக்காக முன்னுருவகிக்கப் பெற்றதை (தொடக்க நூல் 3:15) பிற்கால முழு வெளிப் பாட்டின் ஒளியில் நாம் காணலாம். அதுபோல் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனப் பெயர் பெறப்போகும் மகனை கருத்தாங்கிப் பெற்றெடுப்பார் (எசாயா 7:14) என்று கூறப் பெற்ற கன்னியும் இவரே." (திருச்சபை எண். 55)
   மீட்கப்பெற வேண்டிய மக்களனைவருள் ஒருவராக இருந்தாலும், "மீட்பரின் தாயாகுமாறு, மரியாவை அந் நிலைக்குத் தகுந்த அருள் கொடைகளால் கடவுள் நிரப்பினார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 490) "மரியா உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, கிறிஸ்துவிடம் இருந்து வரும் தூய்மையின் ஒளியால் நிரப்பப்பெற்றார். படைக்கப்பட்ட மற்ற எந்த நபரையும் விட மரியாவுக்கு ஆசி வழங்கியுள்ள இறைத்தந்தை, 'தூயவராகவும் மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே அவரைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.' (எபேசியர் 1:4)" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 492) "தம் மகன் இயேசுவின் பேறுபலன்களை முன்னிட்டு சீரிய முறையில் மீட்கப் பெற்றுள்ள மரியா, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்றிருக்கிறார்." (திருச்சபை எண். 53)
   "இறைவாக்கு மனிதரானதன் காரணமாக கடவுளின் பராமரிப்புத் திட்டத்தில் நித்தியத் திலிருந்தே கடவுளின் தாய் என முன் நியமனம்பெற்றவர் தூய கன்னி. இவ்வுலகில் இவர் இறை மீட்பரின் அன்பு அன்னையாகவும், எவரையும் விஞ்சும் முறையிலே ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும், மனத்தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்கினார். கிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார்; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம்மகனோடு அவரும் துன்புற்றார். இவ்வாறு மனிதருக்கு அருள்வாழ்வைத் திரும்பப் பெற்றுத்தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, பற்றியெரியும் அன்பு என்பவற்றால் நிறைவாழ்வு அலுவலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 61) இத்தகைய சிறப்புகளால், இறை யன்னை மரியா நம் வணக்கத்துக்கு தகுதியானவராய் இருக்கிறார்.