அன்னையின் செபங்கள்

செபமாலை:
மகிழ்ச்சிநிறை மறையுண்மைகள் (திங்கள், சனி):
ஒளியின் மறையுண்மைகள் (வியாழன்):
துயரம்நிறை மறையுண்மைகள் (செவ்வாய், வெள்ளி):
மகிமைநிறை மறையுண்மைகள் (ஞாயிறு, புதன்):

மங்கள வார்த்தை செபம்:
   அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிபெற்றவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிபெற்றவரே!
   புனித மரியாவே, இறைவனின் மாதாவே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

இரக்கத்தின் அரசி செபம்:
   இரக்கத்தின் அன்னையாகிய எங்கள் அரசியே வாழ்க! எங்கள் வாழ்வே, தஞ்சமே, இனிமையே வாழ்க! நாடிழந்து தவிக்கும் நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்த கண்ணீர் பள்ளத்தாக்கிலே நின்று மனம் நொந்து அழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய இரக்கமுள்ள திருக்கண்களை எங்கள்பேரில் திருப்பியருளும். மேலும் நாங்கள் இந்த வேற்றிடம் கடந்த பிறகு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசு கிறிஸ்து நாதருடைய, முழுமையான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும், இரக்கமும் கனிவும் இனிமையும் உள்ள கன்னி மரியாவே!

புனித பெர்நார்தின் செபம்:
   மிகவும் இரக்கமுள்ள தாயே, இதோ உமது பாதுகாவலை நாடிவந்து, உமது உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியரின் அரசியான கன்னிகையே, என் தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் தூண்டப்பட்டு, உம் திருமுன் அண்டி வருகி றேன். பெருமூச்செறிந்து அழுது நிற்கிற பாவியாகிய நான், உம் இரக்கத்தை எதிர்பார்த்து உமது சமூகத்திலே நிற்கிறேன். மனுவுரு ஏற்ற வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணி யாமல் கனிவோடு கேட்டு பதில் அளித்தருளும். -ஆமென்.

பாவிகளின் அடைக்கல செபம்:
   சென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாவே, பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம். எங்கள்பெரில் இரக்கமாய் இருந்து, எங்களுக்காக உமது திருமகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

பொதுவான மூவேளை செபம்:
   முதல்: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார்
   எல்லோரும்: அவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறைந்த...
   முதல்: இதோ ஆண்டவருடைய அடிமை
   எல்லோரும்: உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறைந்த...
   முதல்: வார்த்தை மனிதர் ஆனார் 
   எல்லோரும்: நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறைந்த...
   முதல்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி,
   எல்லோரும்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக: இறைவா, வானதூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசு மனித ரானதை அறிந்திருக்கிறோம். அவருடையப் பாடுகளினாலும் சிலுவையினாலும், நாங்கள் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை அடையுமாறு, எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென். 

பாஸ்கா காலத்தின் மூவேளை செபம்:
   முதல்: விண்ணக அரசியே! மனம் களிகூரும், அல்லேலூயா!
   எல்லோரும்: ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறுபெற்றீர், அல்லேலூயா!
   முதல்: தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
   எல்லோரும்: எங்களுக்காக இறைவனை மன்றாடும், அல்லேலூயா!
   முதல்: கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்படைவீர், அல்லேலூயா!
   எல்லோரும்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
செபிப்போமாக: இறைவா, உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வின் உயிர்ப்பினால் உலகம் களிகூர அருள்புரிந்தீரே, அவரது திருத்தாயாகிய கன்னி மரியா வின் துணையால் நாங்கள் என்றும் நிலைவாழ்வின் பேரின்பத்தைப் பெற அருள் புரியுமாறு, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.