Wednesday, 29 January 2014

மரியே வாழ்க!

"கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவ தாக!" (தானியேல் 2:20) என்றுதானே கூறப்பட்டிருக்கிறது. மரியாவை ஏன் வாழ்த்த வேண்டும்?

   எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) இவ்வுலகில் தந்தை இல்லாதவராக பிறந்த இறைமகன் இயேசு, தாய் இல்லாதவராக தோன்ற விரும்பவில்லை. இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் ஒன்றித்திருக்கிற இறைமகனை அற்புதமான முறையில் கருத்தாங்கிப் பெற்றெடுத்ததால் இறைவனின் தாயாகும் பேறுபெற்றவர் கன்னி மரியா. உலகமே கொள்ளாத இறைவனை, தம் வயிற்றில் சுமந்த மரியாவை நாம் வாழ்த்துவதில் தவ றெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மரியா மக்கள் அனைவராலும் வாழ்த்தப்பட வேண்டுமென்பது கடவுளின் திருவுளம். 
   "விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதை யும் பெற்றுக் கொள்ள முடியாது" (யோவான் 3:27) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, மரியா பெறுகின்ற வாழ்த்தும் விண்ணில் இருந்தே வந்தது. மரியா இறைமகனின் தாயாக முன்குறிக்கப்பட்டிருந்ததால் தந்தையாம் கடவுள் தம் வானதூதரை அனுப்பி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க!" (லூக்கா 1:28) என வாழ்த்துகிறார். "அறிவுக்கு அப்பாற்பட்ட இறைவனின் செயல்முறைகளுக்கும், அவரது முடிவில்லா விருப்பத்திற்கும் நடுவில் நின்றுகொண்டு, விசுவாசத்தின் மங்கலான ஒளியில், இறைவனின் திட்டத்துக்கு தம்மை கையளித்ததால்" (மரியாயின் சேனை கைநூல் அதி. 5) மரியா ஆண்டவரின் தாயானார். இவ்வாறு எல்லாத் தலைமுறையினரிடமும் 'பேறுபெற்றவர்' (லூக்கா 1:48) என்ற வாழ்த்தை மரியா உரிமையாக்கிக் கொண்டார்.
   தூய ஆவியாரின் வல்லமையால் 'உன்னத கடவுளின் மகனை' (லூக்கா 1:32) கருத்தாங்கிய மரியா, செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தியதும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார். அப்போது எலிசபெத்தை ஆட்கொண்ட தூய ஆவியார், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" (லூக்கா 1:42) என்று வாழ்த்தியதோடு, மரியாவை "ஆண்டவரின் தாய்" (1:43) என்றும் அழைத்தார். "ஓர் எளியப் பெண் இறைவனின் தாயாக இருப்பது அனைத்திற்கும் மேலான இறைத்திட்டம் அல்லவா? அவர் ஒரு கன்னிப் பெண்ணைத் தம் தாயாகச் செய்ததை மிகச்சிறந்த அற்புதம் என்று சொல்வதற்கு தடை எதுவும் உண்டோ?" (கன்னி மரியாளின் வணக்க மாதம் பக். 23) இவ்வாறு மூவொரு இறைவனிடம் பெற்றிருக்கும் மேன்மையான இடத்தால், மரியா மனிதகுலத்தின் வாழ்த்துக்கும் வணக்கத் திற்கும் என்றும் தகுதி உள்ளவராகத் திகழ்கிறார்.

Wednesday, 22 January 2014

அன்னை வணக்கம்

"உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவ ருக்கே பணி செய்" (மத்தேயு 4:10) என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக, மரியாவுக்கு வணக்கம் செலுத்து வது ஏன்?

   "வானதூதர் தூது சொல்ல வந்த நேரத்தில் நம்பிக்கை யுடன் தாம் அளித்த இசைவைக் கன்னி மரியா சிலுவை வரை தயங்காது காத்து வந்தார். இவ்வாறு இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டோர் முடிவில்லா நிறைவு பெறும்வரை அருள் திட்டத்தின்படி மரியாவின் தாய்மையும் தடையின்றி நீடிக்கும். ஏனெனில், விண் ணேற்புக்குப் பின்பும் இந்நிறைவாழ்வு அலுவலை அவர் விட்டுவிடவில்லை. மாறாக பலவிதங்களில் பரிந்துபேசி நிலையான நிறைவாழ்வடைய நமக்குத் தேவையான கொடைகளை எப்போதும் பெற்றுத் தருகின்றார்." (திருச் சபை எண். 62) எனவே, "நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு நம்பிக்கை கொண்டோர் முதற் கண் வணக்கம் செலுத்த வேண்டும்." (திருச்சபை எண். 52)
   "திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத் தால் (Hyperdulia) தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப் பெற்றவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் 'கடவுளின் தூய்மைமிகு தாய்' ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் 'கடவுளின் தாய்' என்றழைத்து வணங்கினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் புகலடைந்திருக்கின்றனர். குறிப்பாக எபேசு (கி.பி. 431) திருச்சங்கத்திற்குப் பிறகு, வியத்தகு முறையில் கடவுளின் மக்கள் மரியாவை அதிக மதிகம் வணங்கவும், அன்பு செய்யவும், உதவிக்கு அழைக்கவும், கண்டுபாவிக்கவும் முற்பட் டனர்." (திருச்சபை எண். 66)
   "'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்' (லூக்கா 1:48) என்று மரியாவே முன்மொழிந்ததற்கு ஏற்ப, திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக் கம் உண்மையிலேயே தனிப்பட்டது. மனிதரான வாக்குக்கும், தந்தைக்கும், தூய ஆவியா ருக்கும் நாம் அளிக்கும் ஆராதனையில் (Latria) இருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது. மேலும், இறை ஆராதனையை இவ்வணக்கம் மிகச்சிறந்த விதமாய் ஊக்குவிக்கிறது எனலாம். வழுவற்ற மரபுக் கோட்பாட்டிலிருந்து மாறுபடாத, இறையன்னைக்குரிய பலவகையான பக்தி முயற்சிகளின் பயனாக நாம் தாயைப் பெருமைப்படுத்தும்போது, மகனை அறிந்து, அன்பு செய்து மாட்சிமைப்படுத்துகிறோம்; அவர் கட்டளைகளின்படி நடக்கிறோம். ஏனெனில், அவ ருக்காகவே அனைத்தும் உள்ளன.' (கொலோசையர் 1:15-16)" (திருச்சபை எண். 66)

Wednesday, 15 January 2014

மரியாவின் சிறப்பு

கடவுளால் தனிப்பட்ட விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர் என்று கூறும் அளவுக்கு மரியாவிடம் காணப்படும் சிறப்பு என்ன?

   "பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத் திருநூல்களும் மாண்புக்குரிய மரபும் நிறவாழ்வுத் திட்டத்தில் மீட்பரின் தாய்க்குரிய பணியை மேன்மெலும் அதிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டு நூல்கள், மீட்ப ரின் தாயான ஒரு பெண்ணின் உருவைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன. முதல் பெற்றோர் பாவம் புரிந்தபின், அலகையின் மேல் பெறப்போகும் வெற்றியைப் பற்றிய வாக்குறுதி அவர்களுக்கு அளிக்கப் பெற்றது. இவ் வாக்குறுதியில் மரியா இறைவாக்காக முன்னுருவகிக்கப் பெற்றதை (தொடக்க நூல் 3:15) பிற்கால முழு வெளிப் பாட்டின் ஒளியில் நாம் காணலாம். அதுபோல் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனப் பெயர் பெறப்போகும் மகனை கருத்தாங்கிப் பெற்றெடுப்பார் (எசாயா 7:14) என்று கூறப் பெற்ற கன்னியும் இவரே." (திருச்சபை எண். 55)
   மீட்கப்பெற வேண்டிய மக்களனைவருள் ஒருவராக இருந்தாலும், "மீட்பரின் தாயாகுமாறு, மரியாவை அந் நிலைக்குத் தகுந்த அருள் கொடைகளால் கடவுள் நிரப்பினார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 490) "மரியா உற்பவித்த முதல் கணத்தில் இருந்தே, கிறிஸ்துவிடம் இருந்து வரும் தூய்மையின் ஒளியால் நிரப்பப்பெற்றார். படைக்கப்பட்ட மற்ற எந்த நபரையும் விட மரியாவுக்கு ஆசி வழங்கியுள்ள இறைத்தந்தை, 'தூயவராகவும் மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே அவரைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.' (எபேசியர் 1:4)" (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 492) "தம் மகன் இயேசுவின் பேறுபலன்களை முன்னிட்டு சீரிய முறையில் மீட்கப் பெற்றுள்ள மரியா, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்றிருக்கிறார்." (திருச்சபை எண். 53)
   "இறைவாக்கு மனிதரானதன் காரணமாக கடவுளின் பராமரிப்புத் திட்டத்தில் நித்தியத் திலிருந்தே கடவுளின் தாய் என முன் நியமனம்பெற்றவர் தூய கன்னி. இவ்வுலகில் இவர் இறை மீட்பரின் அன்பு அன்னையாகவும், எவரையும் விஞ்சும் முறையிலே ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும், மனத்தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்கினார். கிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார்; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம்மகனோடு அவரும் துன்புற்றார். இவ்வாறு மனிதருக்கு அருள்வாழ்வைத் திரும்பப் பெற்றுத்தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, பற்றியெரியும் அன்பு என்பவற்றால் நிறைவாழ்வு அலுவலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தார்." (திருச்சபை எண். 61) இத்தகைய சிறப்புகளால், இறை யன்னை மரியா நம் வணக்கத்துக்கு தகுதியானவராய் இருக்கிறார்.

Wednesday, 8 January 2014

பேறுபெற்ற கன்னி

"பேறுபெற்றவர்!" என்று சொல்லும் அளவுக்கு மரியா சாதித்தது என்ன?

   "கடவுள் உலகிற்கு அனுப்ப இருந்த தம் மகனுக்கு உடலைத் தயார் செய்ய, படைப்பு ஒன்றின் சுதந்திரமான ஒத்துழைப்பை நாடினார். இதற்காக காலங்கள் அனைத்தி லும் இருந்து இஸ்ரேலின் மகள் ஒருவரை, கலிலேயா வின் நாசரேத்தைச் சேர்ந்த யூத இளம்பெண்ணை, 'தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு வருக்கு மண ஒப்பந்தமான கன்னி மரியாவை' (லூக்கா 1:27) தம் மகனுக்குத் தாயாக கடவுள் தேர்ந்தெடுத்தார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 488) எனவேதான் மரியா, "தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையின ரும் என்னைப் பேறுபெற்றவள் என்பர்" (லூக்கா 1:48) என்று கூறுகின்றார்.
   "அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க கொண்ட ஆவலால், 'காலம் நிறைவேறிய போது... நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராக... அனுப்பினார்,' (கலாத் தியர் 4:4-5) இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கி, தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதரானார்." (திருச்சபை எண். 52) இவ்வாறு, "ஏவாளின் வழிமரபினர் நடுவினின்று, கன்னி மரியாவைத் தம் மகனின் தாயாகு மாறு கடவுள் தேர்ந்து கொண்டார். அருள் நிறைந்தவரான மரியா, மீட்பின் தலைசிறந்த கனி யாக விளங்குகிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 508)
   "எனவே, மரியா உண்மையாகவே 'கடவுளும் மீட்பருமானவரின் தாய்' என ஏற்றுக்கொள்ளப் பெற்று போற்றப்பெறுகிறார். இறைமகனின் தாய் என்ற இந்த உன்னத நிலையானலும் பெருமை யாலும் அணி செய்யப் பெறுகின்றார். இதன் காரணமாக, இறைத்தந்தைக்கு மிகவும் உகந்த மகளாகவும் தூய ஆவியின் திருக்கோயிலாகவும் திகழ்கின்றார். இந்த மேன்மையான அருள் கொடையினால் விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள மற்ற எல்லாப் படைப்பு களையும் விட மிகவும் சிறப்புற்று விளங்குகின்றார்." (திருச்சபை எண். 53) எனவே, "வல்ல வராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்" (லூக்கா 1:49) என்ற கன்னி மரியாவின் சொற்களில் உள்ள உண்மையை உணர்ந்தவர்களாய், அவரைப் 'பேறுபெற்றவர்' என அழைப்பதில் தவறேதும் இல்லை.

Wednesday, 1 January 2014

வாழ்வோரின் தாய்

"நான் ஆண்டவரின் அடிமை" (லூக்கா 1:38) என்று கூறிய சாதாரணப் பெண் மரியாவை, கத்தோலிக்கர்கள் தலை யில் தூக்கிவைத்து கொண்டாடுவது ஏன்?

   "நான் ஆண்டவரின் அடிமை" என்று கூறும் முன்பே, மரியா உலக மீட்பரின் தாயாகுமாறு முன்குறிக்கப்பட்டவ ராக இருந்தார். "ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற் றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன்நியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தையாம் கடவுள் ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப் பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்தமுறை யில் நிறைவேறுகின்றது." (திருச்சபை எண். 56)
   "கிறிஸ்துவின் பிறப்பு மரியாவுக்கு அறிவிக்கப்பட்டதிலி ருந்து, கடவுளின் வாக்குறுதிகளும் தயாரிப்புகளும் நிறை வேறுகின்ற 'காலத்தின் நிறைவு' தொடங்குகிறது. இறைத் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் குடிகொண் டிருக்கிற இயேசுவைக் கருத்தாங்க மரியா அழைப்பு பெற்றார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 484) "கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானத்தூதர் 'அருள்மிகப் பெற்றவரே' (லூக்கா 1:28) என்று வாழ்த்துகின்றார். இக்கன்னியும், 'நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார்." (திருச்சபை எண். 56)
    "வானதூதர் தூது சொன்னதும் கன்னி மரியா தம் உடலிலும் உள்ளத்திலும் கடவுளின் வார்த்தையை ஏற்று, உலகிற்கு வாழ்வை வழங்கினார்." (திருச்சபை எண். 53) "இவ்வாறு கடவுளின் வாக்குக்கு இசைவு அளித்ததால், ஆதாமின் மகளான மரியா இயேசுவின் தாயானார். தூய இரேனெயு கூறுவதுபோல, 'மரியா தம் கீழ்ப்படிதலால் தாமும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக் காரணமானார்.' இவரோடு வேறுபல பழங்காலத் தந்தையரும் பின்வரு மாறு கூறுகின்றனர்: 'ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாவின் கீழ்ப்படித லால் அவிழ்க்கப்பட்டது; நம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியா அவிழ்த்துவிட்டார்.' ஏவாளோடு ஒப்பிட்டு, மரியாவை 'வாழ்வோரின் தாய்' என வும் அவர்கள் அழைக்கின்றனர்.'' (திருச்சபை எண். 56) இவ்வாறு பேறுபெற்றவராகத் திகழும் மீட்பரின் தாய் மரியாவை, கத்தோலிக்கர்கள் கொண்டாடுவதில் தவறு என்ன இருக்கிறது?